அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.. முதலிடம் பிடித்தவருக்கு கார் பரிசு..

 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.. 

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

உலகப்புகழ்பெற்ற  மதுரை மாவட்டம் அவனியாபுரம்  ஜல்லிக்கட்டுப் போட்டி, காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக   1,000 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்டனர்.  இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை அமைச்சர் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  ஜல்லிக்கட்டு போட்டியினைக் காண ஏராளமான பொதுமக்கள் அவனியாபுரத்தில் குவிந்திருந்தனர்.  தொடர்ந்து அடங்க மறுத்து சீறிப்பாய்ந்த  காளைகளை, வீரர்கள் சாமர்த்தியமாக பிடித்து அசத்தினர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

காலையில் தொடங்கி தொடர்ந்து   11 சுற்றுகளாக  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, சரியாக மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  இந்த போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த விஜய்க்கு, நிசான்  கார் பரிசாக வழங்கப்படுகிறது.  ஜெய்ஹிந்த்புரத்தைச்  சேர்ந்த இவர் மின்சார துறையில், கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முதலிடம் பிடித்த  விஜய்க்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.  

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..  முதலிடம் பிடித்தவருக்கு கார் பரிசு.. 

இதேபோல் , 17 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை  சேர்ந்த கார்த்திக்  என்பவர் 2வது இடம் பிடித்துள்ளார். அவருக்கு  இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.   தொடர்ந்து  13 காளைகளை அடக்கி மதுரை விளாங்குடியைச்  சேர்ந்த பாலாஜி என்கிற இளைஞர் 3ம் இடத்தில் இருக்கிறார்.. அவருக்கு பால் மாடு பரிசாக வழங்கப்பட்டது.  இந்நிலையில் முதல் 3 இடங்களை பிடித்த  காளைகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.   முதலிடம் பிடித்த மதுரை காந்தநின்றல் ஜி.எம். காமேஷ் -மாடுக்கு விளையாட்டுத்துறை சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது. வில்லாபுரம் ஜி.ஆர். கார்த்திக் மாடு 2ம் இடம் பிடித்ததை அடுத்து, மதுரை மாநகராட்சி சார்பில் வாஷிங் மெஷின் பரிசாக வழங்கப்பட்டது.  அவனியாபுரத்தைச் சேர்ந்த லோடுமேன் முருகன் என்பவருடைய மாடு பிடித்ததை அடுத்து, அவருக்கு பால் மாடு பரிசாக வழங்கப்பட்டது.