ஆட்டோ டிரைவர் பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றிக் கொலை

 
fire

கோவை காளப்பட்டி அருகே லோடு ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுனர் மீது திடீரென வந்த ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

fire

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம்பாளையத்தை சேர்ந்த ரவி (47).டாட்டா ஏசி லோடுஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று காலை தனது ஆட்டோவில் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரவி மீது ஊற்றிவிட்டு தீ பற்ற வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்றார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதே சமயத்தில் ரவி தீப்பிடித்த நிலையில், படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து பொது மக்களின் உதவியுடன் ரவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ரவி நேற்று மாலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேரு நகரில் வசித்து வரும் விருதுநகரை சோ்ந்த பூமாலை ராஜா என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் பூமாலை ராஜா மீது கொலை வழக்கு மற்றும் எக்ஸ்பிளோசிவ் சட்டப்பிரிவு 1908 இன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ரவியின் உறவினர்கள் குற்றவாளி மீது உரிய நடவடிக்கைகள் மற்றும் சரியான விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரவியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் கல்வி உள்ளிட்ட பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் நிலைய அதிகாரிகள் கொலை செய்த நபர் வேலையில்லாத விரக்தியில் கொலை செய்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால் இது முரணாக உள்ளது என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.