நெடுஞ்சாலை துறையில் பணியில் உள்ள குறைபாடுகளை களைய உள் தணிக்கை குழு அமைப்பு

 
Tamilnadu arasu

நெடுஞ்சாலை துறையில் பணியில் உள்ள குறைபாடுகளை களைய உள் தணிக்கை குழு அமைத்து, பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் பணியில் உள்ள குறைபாடுகளை களைய உள் தணிக்கை மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலு அறிவித்திருந்தாரர். இந்நிலையில், உள் தணிக்கை குழு அமைத்து, பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. உள் தணிக்கை குழுவில் கண்காணிப்புப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் மற்றும் 4 உதவி கோட்டப் பொறியாளர், 8 உதவி பொறியாளர்கள் இடம்பெறுவர். கண்காணிப்புப் பொறியாளர் தலைமையிலான குழு சாலைப் பணிகள் தொடர்பான ஆவணங்கள், பதிவுகள், பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவைப்பட்டால், பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உள் தணிக்கைக் குழு தேவையான ஆவணங்களை முழுமையாகச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாட வேண்டும்.

velu

கண்காணிப்புப் பொறியாளர் தலைமையிலான உள் தணிக்கைக் குழு, நடத்தப்பட்ட ஆய்வு குறித்த விரிவான அறிக்கையை நெடுஞ்சாலைத் துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை இயக்குநருக்கு அறிக்கைகள் மிகவும் ரகசியமாகச் சமர்ப்பிக்கப்படும். நெடுஞ்சாலைத் துறையின் இயக்குநர், உள் தணிக்கைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகள் , கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் செயல்படுவார். தேவைப்பட்டால், உள் தணிக்கைக் குழு, நெடுஞ்சாலைத் துறையின் இயக்குரால் விசாரிக்கப்படும்.உள் தணிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட, முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மே மாத இறுதிக்குள் நெடுஞ்சாலை இயக்குநர் அரசுக்கு அறிக்கை அனுப்புவார்.