ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: வேல்முருகன் கண்டனம்!

 
tn

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பள்ளி நிர்வாகத்தின் அத்துமீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது! கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில், செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் இதழின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ்  மீது பள்ளி நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.ஒரு நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படும்போது, அதன் வாயிலாகவே அந்நாட்டில், அனைவருக்குமான பாதுகாப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சனின் கூற்று.

tn
உள்நாட்டுப் போர், கொரோனா வைரஸ் தொற்று எனப் பல இக்கட்டான சூழலில், பத்திரிகையாளர்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்களது பணியினை சிரத்தையுடன் மேற்கொண்டனர். ஆனால், பத்திரிகையாளர்கள் மீதான விரோதப் போக்குகள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளியில், மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார் நக்கீரன் இதழின் மூத்த பத்திரிகையாளர்  பிரகாஷ் .

இந்நிலையில், பள்ளி மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜித்குமார் ஆகிய இருவரின் மீது, ரவுடி கும்பலை ஏவி கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.தலைவாசல் அருகே பிரகாஷ் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த கும்பல், பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.உண்மை சுடும் என்பது பெரியோர் வாக்கு. தான் தொடர்ந்து எழுதி வந்த உண்மைகளால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகம், இப்படியான தாக்குதலை நடத்தியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டிய பள்ளி நிர்வாகம், அதற்கு பதிலாக மாணவர்களையும், பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் மிரட்டி வருவது ஏற்புடையதல்ல.

tn

பத்திரிகையாளர் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜித்குமார் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை காவல்துறை கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. இந்த தாக்குதலை நடத்த காரணமான பள்ளி நிர்வாகத்தை, நீதியின் முன் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர்  பிரகாஷ், அஜித்குமாருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் பணிகளை, எந்த அச்சமும், இடையூறுமின்றி, மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.