பாடத்திட்டத்தில் இல்லாததை கேள்வியாக கேட்பதா? ஆதிதிராவிடர் ஆணையம் புகார் மனு

 
பெரியார்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவ தேர்வு வினாத்தாளில் முதுகலை வரலாறு இரண்டாமாண்டு தேர்வு வினாத்தாளில், நான்கு சாதிப் பெயர்களை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி எனக் கேள்வி இடம்பெற்றுள்ளது. சாதி ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வினாத்தாள் பிற பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஷெட்யூல் காஸ்ட் என்பதற்கு ஆதி திராவிடர் என்ற மொழிபெயர்ப்பை பயன்படுத்த வேண்டாம் என்றும் தாழ்த்தப்பட்டோர் என்றோ அரிஜன் என்றோ குறிப்பிடக்கூடாது என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணை உத்தரவுகளை மதிக்காமல் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேள்வி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை சரிபார்க்கக்கூடிய அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய தவறியிருக்கிறார்கள் என ஆதி திராவிடர் நல ஆணையம் கூறியுள்ளது. 

எனவே பல்கலைக்கழக துணைவேந்தர் பதிவாளர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் வரலாற்று துறை தலைவர் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்  ஆணையம், இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் இனிமேல் சாதி ரீதியாக இழிவுப்படுத்தும் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், சாதி ரீதியாக இழிவுப்படுத்தும் செயலை வளர்க்க நினைக்கும் சக்தியை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்றும் கூறியுள்ளது. 


பெரியார் பல்கலையில் எம்.ஏ வரலாற்று தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம்பெற்றது குறித்து ஆணையத்துக்கு புகார்கள் வந்ததாகவும், சாதி குறித்த கேள்வி பாடத்திட்டத்தில் வராத ஒரு பகுதி என்பதும் கவனத்துக்கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ள ஆதிதிராவிடர் ஆணையம், புகார்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து புகார் மனு ஒன்றை பதிவு செய்ய முன்வந்துள்ளது.