ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலம் 14வது முறையாக நீட்டிப்பு

 
Arumugasamy

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலத்தை மேலும் 3 வார காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.   இந்த விசாரணை ஆணையம்  அப்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் , சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 160  நபர்களிடம் இதுவரைக்கும் விசாரணை நடத்தியிருக்கிறது. விசாரணை நிறைவடைந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்தது. இந்த விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு கூறியிருந்தது.

விசாரணை ஆணையத்துக்கு ஏற்கனவே, 13 முறை கால நீட்டிப்பு வழங்கிய நிலையில், அதன் பதவி காலம் நேற்று நிறைவடைந்தது. எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளிக்காததால், ஆணையம் அறிக்கை நிறைவு பெறாத நிலை உள்ளதாகவும், எனவே, மேலும் மூன்று வாரம் கால அவகாசம் வழங்கும்படி, ஆணையம் தரப்பில் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதை ஏற்ற அரசு, மேலும் மூன்று வாரம் அவகாசம் கொடுத்து, வரும் 24ம் தேதிக்குள், அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது.