தமிழக மின்சார வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளது - அர்ஜூன் சம்பத் பேச்சு

 
arjun sampath

தமிழக மின்சார வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளதாகவும்,. முதலமைச்சர் மு.க.ஸ்டாலி  மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் திண்டுக்கல்லில் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அரசு வழங்கிய இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. 

eb

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது: கடந்த 16 மாதங்களில் தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளது. முதலமைச்சர் மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள நிலையில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் இது போல் பேசியுள்ளார். இவ்வாறு கூறினார்.