தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் போலி ஆவணங்கள் மூலம் பேராசிரியர் பணிநியமனம், முறைகேடாக ஊதியம்...

 
தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் தனியார் கல்லூரி

போலி ஆவணங்கள் கொடுத்து பேராசிரியர்கள் பணி நியமனம் மற்றும் பணிக்கு வராமல், வந்தது  போல் கணக்கு காட்டி முறைகேடாக ஊதியம் பெற்றது என இரண்டு  குற்றச்சாட்டுகளின் பெயரில்  லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் மற்றும் கல்வி இணைய இயக்க மண்டல துணை இயக்குநர் உள்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

a.v.v.m sri pushpam college in thanjavur


தஞ்சாவூர் அருகே பூண்டியில் புகழ்பெற்ற புஷ்பம் கலைக் கல்லூரி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை மறைந்த முன்னாள் எம்.பி  துளசி அய்யா வாண்டையார் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கல்லூரியில் 2015 -ம் ஆண்டு முதல் 2017 -ம் ஆண்டு வரை பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு  கிடைத்த தகவலின்படி, காவல் ஆய்வாளர் சசிகலா விசாரணை நடத்தினார். இதையடுத்து இக்கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டு  உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இன சுழற்சி முறையை பின்பற்றவில்லை. இதில் உதவி பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என போலியான சாதிச்சான்றிதழை வழங்கி  பணியில் சேர்ந்துள்ளனர்.
இதை உண்மை என சமர்பித்து, அரசை ஏமாற்றி கல்லூரி நிர்வாகம் 2017-ம் ஆண்டு முதல்  தற்போது வரை அவர்களுக்கு ஊதியமாக ரூ. 55 லட்சம் பெற்று வழங்கியுள்ளது.

இன சுழற்சி முறையில் பணி நியமனத்துக்கு தேர்வானவர்களின் சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் உதவி பேராசிரியர்களாக பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் டி.அறிவுடைநம்பி, உதவிப் பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி, கல்லூரி தாளாளரும் முன்னாள் எம்.பி. யும், மறைந்த துளசிஅய்யா வாண்டையார் ஆகியோர் மீது  இந்திய தண்டனை சட்டம் 465, 120(பி),468, 471, 420, 409 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஜூலை 27-ம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் கடந்த 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இக்கல்லூரியில் நான்கு உதவி பேராசிரியர்கள் ஆராய்ச்சி படிப்பிற்காக சென்றபோது, அவர்களுக்கு பதிலாக faculty improvement programme திட்டத்தின் கீழ் நான்கு உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மூன்று 03.112015 முதல் 02.11.2017 வரை 24 மாதங்கள் பணிபுரிய நியமிக்கப்பட்டனர். ஆனால்  இயற்பியல் துறைக்காக நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர் ஸ்ரீராம் என்பவர் 14.01.2016 பிறகு கல்லூரிக்கு பணிக்கு வரவில்லை. ஆனால் ஸ்ரீராம் கல்லூரிக்கு வந்தது போல் வருகை பதிவில் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு  வராத  24 மாதங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழுவிடம் இருந்து முறைகேடாக 11,68,896 ரூபாய் ஊதியம் பெற்றுள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக கல்லூரி தாளாளர் துளசிய்யாவாண்டையார், கண்காணிப்பாளர் துரைராஜன், முதல்வர் உதயகுமார், கணக்காளர் குமரேஷ்  ஆகியோர்  மீது 10 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.