இரட்டை இலை சின்னத்தை வழங்க ஓபிஎஸ் முறையீடு

 
ops

அதிமுக கட்சி நிர்வாகம் மற்றும் இரட்டைஇலை சின்னத்தை எங்களுக்கே வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதையும் கட்சியில் இருந்து தங்கள் தரப்பு நீக்கப்பட்டது எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த வைத்திலிங்கம், நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்  விதிமீறலானது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டதும், ஓபிஎஸ் தரப்பு நீக்கப்பட்டதும், புதிய பொருளாளர் நியமனமும் செல்லாது என்பதை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளோம். இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அதிகாரத்தை தங்களுக்கே வழங்க உத்தரவிடவும்  முறையிட்டுள்ளோம்.   மேலும், இடைக்கால பொதுச்செயலாளர் செல்லாது என சசிகலாவுக்கு எதிரான நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இப்போதும் பொருந்தும் என்பதால் பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள  உள்ளதாகவும் தெரிவித்த வைத்திலிங்கம் , 
தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்தின் படி இன்று வரை தான் தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர்  ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே. 
நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது தங்கள் தரப்பை கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கையும் மேற்கொள்ள கூடாது எனவும் மீறி வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து கரூர் வைஸ்ய வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.