ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜர்

 
apollo apollo

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகியுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. அவர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் எதுவும் தனக்கு தெரியாது என கூறியிருந்தார். இதுவரை 156 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு விசாரணையை நிறைவு செய்தனர்.

Arumugasamy

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவர்களிடம் ஏப்ரல் 5, 6, 7 ஆகிய 3 நாட்கள் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று மருத்துவர்கள் என 3 நாட்கள் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று  அப்பல்லோ மருத்துவர்கள் செந்தில் குமார் மற்றும் தவ பழனி ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர். இந்த விசாரணையுடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்து அரசிடம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.