இந்தி எதிர்ப்புப் பேரணி - தொண்டர்களுக்கு சீமான் அறிவுறுத்தல்!!

 
seeman

இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகைதரும் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Seeman

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரன்பின் உறவுகளுக்கு..! வருகின்ற நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கவிருக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக நீங்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் அணியமாகி வருவதை அறிந்து பெரிதும் மகிழ்கின்றேன்.

seeman

தற்போது மழைக்காலம் என்பதாலும், அடுத்து வரும் நாட்களில் சென்னையில் மழைபெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக அறிவிப்புகள் வந்திருப்பதாலும் பேரணிக்கு வருகை தரும் உறவுகள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக குடையும், மாற்று உடையும் மறக்காமல் உடன் எடுத்துவாருங்கள். நம்முயிர்த் தமிழ்மொழிக் காக்க முன்னெடுக்கப்படும் இப்பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். வரலாறு காணாத வகையில் நடைபெறவுள்ள மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் உணர்ச்சிப்பெருக்குடன் வருகை தரவிருக்கும் எனது பேரன்பிற்குரிய உறவுகளையும், அன்புத் தம்பி, தங்கைகளையும் நேரில் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.