ஆதீனத்தை பதவியில் இருந்து விலகவைத்து நினைத்ததை திமுக சாதிக்கிறது- அண்ணாமலை

 
annamalai

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு புதிய மடாதிபதியைத் தேர்வு செய்யும் வரை இந்து சமய அறநிலை துறை சார்பில் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

TN BJP chief Annamalai says he didn't call journalists monkeys | The News  Minute

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, கோவில்களை சரிவர பராமரிக்காமல், ஆகமங்களை சரிவர கடைபிடிக்காமல், திருவிழாக்களை திறம்பட நடத்தாமல், பாரம்பரியங்களை கண்டுகொள்ளாமல், மரபுகளை துளியும் மதிக்காமல், மக்களின் மத நம்பிக்கைகளை உதாசீனப்படுத்துவதை, தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

கோவில் சொத்துக்கள் கொள்ளை போகின்றன. கோவில் சிலைகள் காணாமல் போகின்றன. கடவுளை அலங்கரிக்கும் நகைகள் காணாமல் போகின்றன, என்றெல்லாம் கவலைப்பட்டால், கோவில்களே காணாமல் போகின்றன. நூற்றுக்கணக்கான கோவில்கள் தகர்க்கப்பட்டுள்ளன. மாம்பலத்தில், மக்களின் எதிர்ப்பையும் மீறி அயோத்தியா மடத்தை கைப்பற்ற ஒரு முயற்சியும் நடைபெற்றது.

என்ன நடக்கிறது இந்த ஆட்சியில், இன்று மக்கள் கொதித்துப் போய் இருக்கும், இந்த வேளையில், கோவில்களை அடுத்து ஆதீனங்களின் மீது ஆசை வலை விரிக்கிறது ஆளும் திமுக ஆட்சி.

600 ஆண்டு கால பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தை கைப்பற்ற அமைச்சரின் உறவினர் செய்யும் அத்தனை முயற்சிகளுக்கும், அறநிலைத்துறை துணை போகிறது. காஞ்சிபுரத்தில் பழமையான மடங்களில் ஒன்றான தொண்டை மண்டல ஆதீனம் மடத்தின் 233-வது ஆதீனமாக திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆதீனத்தின் சொத்துக்கள், திருநெல்வேலி உள்ளிட்ட 89 இடங்களில் சொத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மடத்திற்கு, ஆலோசனை வழங்க ஒரு நிர்வாக குழு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நிர்வாக குழு கமிட்டிக்கும், ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுத்து, ஆதீனம் முடங்கியுள்ளது.

வணக்கத்திற்குரிய திருச்சிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார் கூறியபடி,ஆளும் கட்சியினர் உள்ள நிர்வாக கமிட்டியின், செயல்பாடும், மிரட்டல் விடுக்கும் போக்கும் அச்சுறுத்துவதாக உள்ளது என்கிறார். அமைச்சரின் உறவினரின் தலையீடு இருக்கும்போது, பிறகு யாரிடம் புகார் தருவது என்ற அச்சத்தால், அவர் பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை, கமிட்டியிடம் கொடுத்து விட்டார்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு புதிய மடாதிபதியைத் தேர்வு செய்யும் வரை இந்து சமய அறநிலை துறை சார்பில் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆலோசனைகளை மட்டும் வழங்க வேண்டிய நிர்வாகக் குழு அதிகார எல்லைகளை மீறி இனத்தின் மீது அடக்கு முறையை செலுத்த நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது,

TN BJP chief Annamalai's remark 'will control media in 6 months' triggers  row

பாரம்பரிய தமிழ் மரபுப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, குரு சன்னிதானங்கள், ஆதீனகர்த்தர்கள், அவர்களுடைய ஆதீனத்தின் மகா சகல அதிகாரங்களையும் பெற்றவராக மதிக்கப்படுபவர். அனைத்து நிர்வாக முடிவுகள் எடுக்கவும் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கவும் சகல அதிகாரம் பெற்றவராக ஆதீனகர்த்தர்கள் விளங்குகிறார்கள்.

ஆதீனத்தை செயல்படாமல் செய்வதற்காக தொண்டை மண்டல ஆதீனத்தில் ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டு, இறை பற்று இல்லாத ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களை அந்த நிர்வாக குழுவில் இடம்பெறச்செய்து, நல்ல முறையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆதீனத்தை பதவியில் இருந்து விலகவைத்து தாங்கள் நினைத்ததை சாதிக்கின்றனர். இதை பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

என்ன செய்தாலும் ஆன்மீக அடியார்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று ஆளும் திமுக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சிகள் மாறும். இப்போது பணியில் இருக்கும் அதிகாரிகள், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.