ஏப்.14-ம் தேதி முதல் நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை

 
Annamalai

கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து அண்ணாமலை யாத்திரை நடத்த இருப்பதாக வருங்கால திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக தேசிய செயற்குழு கூட்டம் 17,18 ஆகிய நாட்களில் நடைபெற்றது. பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றார்.

கூட்டத்தில் G-20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்றுள்ள பாரதப் பிரதமருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தல், தமிழக சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்த அராஜகத்தை கண்டித்தல். சேது கால்வாய் திட்டம்- ராமர் பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப்பட வேண்டும் , காசி தமிழ் சங்கமம் தந்த பாரத பிரதமர் மோடிக்கு பாராட்டு, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தமிழக திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும், தமிழக பெண் இனத்தை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தல், தமிழக விவசாயிகளையும் நெசவாளிகளும் வங்கிக்கும் திமுக அரசை கண்டித்தல், தமிழகத் தொழில் வளர்ச்சியில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது திராவிட மாடல் ஊழல் ஆட்சி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி நட்டாவிற்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Image


மேலும் வருங்கால திட்டமாக ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து அண்ணாமலை யாத்திரை உள்ளிட்ட 15 செயல்திட்டங்களும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நைனார் நாகேந்திரன், எம்.ஆர் காந்தி, சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  சிபி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா நடிகை நமிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் பாஜக செயற்குழு தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் , முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பாஜக முடிவை ஓரிரு நாளில் முடிவு செய்யும். திமுக ஆதரிக்கும் வேட்பாளரை தோற்கடிக்கவே பாஜக தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளது. அதற்காகவே பாஜக களமிறங்கும்” என தெரிவித்தார்.