சேது சமுத்திர திட்டத்தால் டி.ஆர்.பாலு, கனிமொழிக்கு மட்டுமே லாபம்: அண்ணாமலை

 
annamalai

சேது சமுத்திர திட்டம் குறித்து தெளிவுப்படுத்தாமல் முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 

Annamalai

சேது சமுத்திர  திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற சட்டப்பேரவையில் நேற்று தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இத்திட்டம் இருக்கும் என்றும் இனியும் இத்திட்டத்தை  நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சேது சமுத்திர திட்ட தீர்மானத்தில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. தற்போதைய திட்டத்தின்படி, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் சூழலியல் பேரிடர் ஏற்படும். தற்போதைய சேது சமுத்திர திட்டத்தை தமிழ்நாடு பாஜக எதிர்க்கிறது. ராமர் சேது பாலம் பாதிக்கப்படாமல் திட்டத்தை செயல்படுத்தினால் பாஜக ஆதரவு அளிக்கும். புதிய பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தினால் பாஜக ஆதரிக்கும் தற்போதைய திட்டப்படி பெரிய கப்பல்கள் அந்த வழியே பயணிக்க முடியாது. தற்போதைய சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டு மீனவர்கள், தொழில் முனைவோருக்கு பயன் தராது, சேது சமுத்திர திட்டத்தால் திமுக எம்பிக்கள் டிஆர். பாலு, கனிமொழிக்கு மட்டும்தான் லாபம்” எனக் கூறினார்.