மத அரசியல் செய்வது திமுக தான் பாஜகவினர் அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தை கொடுப்பதே பாஜக- அண்ணாமலை

 
annamalai

காரைக்குடி செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமானத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “விநாயகர் சதுர்த்திக்கு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தான் அரசு விடுமுறை அளித்துள்ளார். அவரை தலைவர் என்று போற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. ஓணம் பண்டிகைக்கு அதிகாலை வேளையில் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு இதுவரை வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை. மத அரசியல் செய்வது திமுக தான் பாஜகவினர் அல்ல. பாஜக என்றுமே அதை செய்வது கிடையாது.

ஜாதியை வைத்து அரசியல் செய்த காலம் மழை ஏறிவிட்டது, அனைத்து சமுதாயத்தினரையும் மேலே கொண்டு வர செய்வது தான் அரசியல். ஒடுக்கப்பட்ட நபர்களை மேலே கொண்டு வர வேண்டும் என்றால் அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவினர் கொள்கை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட வாசனை உபியில் அடிக்கிறது என்றெல்லாம் செய்தி வந்தது. இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என கூறியவர்கள் எதற்காக டெல்லி முதல்வரை அழைத்து வர வேண்டும்?  தமிழகத்தின் பள்ளி மாணவர்கள் போதையின் கையில் உள்ளனர். பஞ்சாயத்து தலைவரின் கணவர் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சென்று அடிக்கிறார். 

இது போன்ற செயல்கள் தமிழகத்தில் இதுவரை யாரும் பார்த்ததில்லை. அமைச்சர் மகன் ஆடம்பரம் கல்யாணம் குறித்து பேச வேண்டியது அவசியம் இல்லை, தமிழகத்தில் யாரெல்லாம் தன்னிடம் சொத்து இருக்கிறதோ என்று வெளிக்காட்டியவர்கள் இன்றைக்கு காணாமல் போய் இருக்கிறார்கள்.  மக்களிடம் சுரண்டி சேர்த்த சொத்துக்களை மக்களிடம் காண்பித்துக் கொள்வதற்காக இது போன்ற ஆடம்பர செயலில் ஈடுபட்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அதே போல் தான் அமைச்சரும் காணாமல் போவார்கள். பிரதமர் மோடி எங்கே நின்றாலும் அது மக்களுக்கு தான் பெருமை. மோடியின் பாராளுமன்ற தொகுதி எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதிக்கு மிகப்பெரிய அங்கீகாரம். புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமனம் என்பது பொறுப்புக்கு தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ராகுல் காந்தியின் யாத்திரை நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. செல்கின்ற இடமெல்லாம் பிரிவினைவாத சக்திகளை சந்திக்கிறார். குழந்தைகளுக்கு தேன் மிட்டாய் வாங்குவதில் கூட ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே ஜாதிய கொலை கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான்” என்றார்.