நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தயார்- அண்ணாமலை

 
annamalai

நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூடலூரில் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் தமிழக அரசு தேயிலை தோட்ட கழகமான டேன் டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்காத காரணத்தால் 251 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3000 ஏக்கர் தேயிலை தோட்டம் வனப்பகுதியாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு தொழிலளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓய்வு பெற்ற 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 14 கோடி மதிப்பில் வீடுகள் கட்டி தர தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் டேன்டீ தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க கோரி கூடலூரில் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது டேன் டீ தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 251 கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ள டேன்டீ நிறுவனத்தை வனபகுதியாக மாற்றாமல் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைத்தால் அதனை ஏற்று நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என்றும் அவர்களுக்கு தினக்கூலிக்கு பதிலாக மாத சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.