கட்டிய புடவையோடு கொட்டும் மழையில் போராடிய பெண்களை கைது செய்த ஸ்டாலின்! அண்ணாமலை ஆவேசம்

 
Annamalai

பாஜகவில் இருக்கும் நடிகைகளை தரக்குறைவாக பேசிய திமுக மாநில பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு 2மணி நேரத்துக்கு பின் விடுவிக்கப்பட்டனர். 

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இதனை போராட்டம் என்று சொல்வதை விட நியாயத்துக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டம். மேடையில் திமுக பேச்சாளர், பாஜகவை சேர்ந்த 4 பெண்களை ஐட்டம் என சொல்கிறார்.அவரை கைதுசெய்யக்கோரி ஒருவாரமாக குரல் கொடுத்தோம். ஆனால் திமுக அரசு செய்யவில்லை. மாறாக அவசர அவசரமாக இன்று காலை திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விடியா அரசு, நியாயத்துக்காக போராடிய பெண்கள் மீது நடவடிக்கை எடுத்தது. கொட்டும் மழையில், பெண்கள், கட்டியிருந்த புடவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2,500 பெண் நிர்வாகிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். எதற்காக முதலமைச்சருக்கு இந்த வீண் வம்பு?ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர். எங்களை கைது செய்ய சொன்ன முதலமைச்சருக்கு தவறு செய்தவரை கைது செய்யுமாறு உத்தரவிட எவ்வளவு நேரம் ஆகும்? இதுதான் இந்த அரசு பெண்களை பாதுகாக்கும் நிலைமையா? சிறுபான்மை சமூகத்தினர் என்பதால் சைதை சாதிக்கை கைது செய்ய திமுக அரசு பயப்படுகிறதா? எந்த மதமாக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்” எனக் கூறினார்.