என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் - அண்ணாமலை

 
annamalai

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

Book Annamalai under SC/ST Act': Complaint against TN BJP chief for  casteist slur | The News Minute

தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை காவல்துறை சார்பில் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிக்கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் மாணவர்களின் எழுச்சி போராட்டமாக மாறி கலவரமாக வெடித்தது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார். மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும்  இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.