ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி? - பாஜகவின் அதிரடி திட்டம்!

 
annamalai

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தமிழக பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  

Annamalai

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட பா.ஜனதாவும் தீவிரமாக உள்ளது. சின்னம் பிரச்சினையால் அ.தி.மு.க.வும், த.மா.கா.வும் போட்டியிட தயங்கினால் பா.ஜனதா களம் இறங்க திட்டமிட்டுள்ளது.  இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது கட்சி தலைமை தெரிவித்தால் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆர்.இளங்கோ போட்டியிட்டார். அந்த தேர்தலில் அண்ணாமலை 68 ஆயிரத்து 553 ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.