என்னது அண்ணாமலை ‘முதலை’மைச்சரா? பேனரால் சர்ச்சை

 
annamalai banner

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி கிராமத்திற்கு வருகை புரிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று அக்கட்சியினர் எழுத்து பிழையுடன் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு கிராம மக்களிடையே  நகைச்சுவையை  உண்டாக்கியது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்ட்டி கிராமத்திற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வருகை புரிந்தார். அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ஒருவர் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வருகை புரிந்த அண்ணாமலையை வரவேற்று அப்பகுதியில் பாஜகவினர் பிளக்ஸ் போர்டுகள் அமைத்திருந்தனர். அதில் ஒரு பிளக்ஸ் போர்டில் வருங்கால முதலமைச்சர் என்பதற்கு பதிலாக வருங்கால முதலைமைச்ர் என எழுத்துப்பிழையுடன் மிகப்பெரிய பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்ட கிராம மக்கள்  முதலமைச்சரா அல்லது முதலைக்கு அமைச்சரா என கிண்டல் அடித்தனர். இதனையடுத்து பாஜகவினர் அந்த பிளக்ஸ் போர்டை அங்கிருந்து அப்புறப்படுத்தி, எழுத்துப்பிழை வெளியே தெரியாமல் இருக்கும் வகையில் போர்டை திருப்பி வைத்தனர். பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை சாணம்பட்டி வருகை புரிந்து பட்டியல் இனத்தவர் வீட்டில் உணவு அருந்திவிட்டு அப்பகுதி கிராம மக்களிடையே உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பாஜகவினர் எழுத்து பிழையுடன் வைத்திருந்த இந்த பிளக்ஸ் போர்டு கிராம மக்களிடையே மட்டுமல்லாமல் பாஜகவினரிடமும் நகைச்சுவையை உண்டாக்கியது.