விஜய், அஜித் போல அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடக்க வேண்டும் - அண்ணாமலை

 
Annamalai

விஜய், அஜித் போல அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் நேற்று வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதேபோல் சென்னையில் அஜித் ரசிகர் ஒருவர் கண்டெய்னர் லாரியில் ஏறி நடனம் ஆடிய போது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நேரம் கிடைக்கும் போது துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் நான் பார்ப்பேன். அரசியலை பொறுத்தவரை துணிவாக இருப்பேன், வாரிசு அரசியலை எதிர்ப்பேன். அதே சமயம் இரண்டு பேரின் ரசிகர்களும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. விஜய்யும், அஜித்தும் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை போலவே அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு சகோதரனாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.