அண்ணாமலை பகல் கனவு காண்கிறார் - முத்தரசன் விமர்சனம்..

 
முத்தரசன்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும், இந்து  சமய அறநிலையத்துறையை நீக்குவோம் என  அண்ணாமலை பகல் கனவு காண்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்து சமய அறநிலையத்துறையை நீக்கவதற்குத் தான் முதல் கையெழுத்து போடும் என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு நூறு ஆண்டுகள் தாண்டிய வரலாறு இருக்கிறது.

அண்ணாமலை

கடவுள்கள் பெயரிலும், சாஸ்திரங்கள் வழியிலும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிறு கும்பலின் பிடியில் இருந்த ஆலயங்களையும், அதன் சொத்துக்களையும் மீட்பதற்கு நீதிக்கட்சி ஆட்சி காலத்தில், இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும். கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களும், கோயில் நிலங்களை உழுது வரும் குத்தகை விவசாயிகளும்தான் கோயில் சொத்துக்களை சேதாரம் இல்லாமல் பாதுகாத்து வருகின்றனர்.

அண்ணாமலை பகல் கனவு காண்கிறார்  - முத்தரசன் விமர்சனம்.. 

கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகளும், சனாதான சக்திகளும் கடவுள் சிலைகளை கடத்துவது, நகை, பணம் போன்றவைகளில் கையாடல் செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள கோயில் சொத்துக்களை திமுக அரசு மீட்டு வரும் செய்தியால், ஆத்திரமடைந்த சுயநல சக்திகளின் உணர்வுகளை அண்ணாமலை பிரதிபலித்து, பகல் கனவு காண்கிறார். அவரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

தலைமுறை, தலைமுறையாக கோயில்மனைகளில் குடியிருந்து வருபவர்கள் மற்றும் கோயில் நில குத்தகை விவசாயிகள், நில உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட வஞ்சகக் குரல் என்பது இயல்பான ஆன்மீகவாதிகளுக்கு எளிதில் புரியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.