ராணுவம் வந்தாலும் தடுக்க முடியாது...என்.எல்.சி நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம் - அன்புமணி ஆவேசம்

 
anbumani

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவதை ராணுவம் வந்தாலும் தடுக்க முடியாது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வரும் என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியை விட்டு வெளியேற வலியுறுத்தி பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 64 ஆண்டுகாலமாக இந்த மண்ணையும், மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக என்.எல்.சி நிறுவனம் மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆசியாவில் தன்னூற்று இருந்த பகுதி நெய்வேலி தான். 8 அடி இருந்த தண்ணீர் தற்போது ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி நிறுவனம் தான். நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. எந்த நிறுவனத்தையும் நான் வேண்டாமென்று கூறியதில்லை. ஆனால் மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. ராணுவத்தை கூட்டி வந்தாலும் என்.எல்.சி நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம். நிலம் எடுக்க வந்தால் முடியாது எனக்கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.