என்.எல்.சி.க்கு எதிராக கடலூரில் ஜன.7, 8ம் தேதிகளில் அன்புமணி நடைபயணம்

 
Anbumani Ramadoss

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

anbumani

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் என்.எல்.சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர்.  கடந்த காலங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கத் தவறியதையும், வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றியதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பை இந்த வகையில் வெளிப்படுத்துகின்றனர்.ஏற்கெனவே நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடும், வேலையும் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் என்.எல்.சி நிறுவனம் செவி சாய்க்கவில்லை. 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வேளாண் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். என்.எல்.சி நிறுவனத்தின் மேலும் 25,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டம் வெற்றிபெற்றால் கடலூர் மக்கள் சொந்த மண்ணில் அனாதையாகிவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.