போதையில் மயங்கி கிடந்த கணவன்-மனைவி; சாப்பாட்டுக்கு தவித்த 3 வயது குழந்தை

 
போதையில் கணவன் மனைவி

புதுச்சேரி அடுத்த கன்னியகோவிலில் போதையில் மயங்கி கிடந்த கணவன்-மனைவியால் அவர்களது 3 வயது ஆண் குழந்தை சாப்பாடு இல்லாமல் தவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரை போதையில் மனைவியுடன் விடிய விடிய கணவன் செய்த அட்டூழியம்.. கரூரில் நடந்த  சம்பவம்..!

புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோயில் பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அந்த கோயில் திடலில் 3 வயதுடைய ஆண் குழந்தையுடன் தம்பதியினர் தங்கியுள்ளனர். பெற்றோர் இருவரும் 24 மணி நேரம் மது போதையில் தள்ளாடியபடி இருந்து வருகின்றனர். 

இதனை, அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார், சிறுவனை கண்டு விசாரித்துள்ளனர். அப்போது அப்பா அம்மா என்று இருவரை கைகாட்டி உள்ளான். போலீசார் அங்கு சென்று பார்க்கும் பொழுது தம்பதியினர், இருவரும் மது போதையில் மயங்கி நிலையில் கிடந்துள்ளனர். அவர்கள் மீது தண்ணீர் தெளித்து எழுப்பி குழந்தையை கவனமாக பார்த்துக்க சொல்லி எச்சரித்தனர். மேலும் அந்த குழந்தைக்கு தின்பண்டங்களையும் உணவையும் வாங்கி கொடுத்து சென்றனர்.

பல முறை எச்சரித்தும் பெற்றோர் மது போதையிலிருந்து மீளுவதாக தெரியவில்லை.இதையடுத்து போலீசார் சிறுவனை காப்பகத்தில் ஒப்படைக்க பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டனர். தொடர்ந்து, சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் ஆகியோர் புதுச்சேரி குழந்தை பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த குழந்தைக்கு ரோந்து போலீசார் புத்தாடை அணிவித்து அனுப்பி வைத்தனர்.