தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு பணி - சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

 
PTR

தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று 5வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் இன்று பதிலுரை அளித்தார். தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத்திருத்த மசோதா பேரவையில் இன்று நிறைவேறியது.
 
2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து அரசுப் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.