அம்பேத்கரும் மோடியும்.. டெல்லி விழாவில் பங்கேற்கும் இளையராஜா

அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தது பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெறவிருக்கும் அம்பேத்கரும் மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்கிறார்.
ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும் என்கிற ஆங்கில நூலை வெளியிடுகிறது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை வழங்கியிருந்தார். அந்த அணிந்துரையில், அம்பேத்கரை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது அவரது மதிப்பை உணர்ந்து அவரது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தி வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் மோடி அதைச் செய்து வருகிறார் என்று கூறியிருந்தார்.
இதற்காக திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதன் பின்னர் இளையராஜா ராஜ்யசபா நியமன உறுப்பினராக பதவி ஏற்றார். அப்போதும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் அம்பேத்கரும் மோடியும் என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நேரு அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி அன்று நடைபெறுகிறது . மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் நடக்கும் இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார். இசையமைப்பாளரும் எம்பியுமான இளையராஜா இந்த விழாவில் பங்கேற்கிறார்.
அம்பேத்கரும் மோடியும் நூலுக்கு இளையராஜா அணிந்துரை எழுதிய போது ஏற்பட்ட அதே சலசலப்பு பரபரப்பு தற்போது அவர் அம்பேத்கர் மோடியும் புத்தக
வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் என்ற செய்தி வந்த போதும் நிலவுகிறது.