பெருநகரங்களுக்கு இணையாக அருகில் உள்ள நகரங்களுக்கும் அடிப்படை வசதி.. - அமைச்சர் தகவல்..

 
தமிழக அரசு

பெருநகரங்களுக்கு இணையாக, அவற்றின் அருகில் உள்ள நகரங்களிலும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதன்மூலம் மக்கள் நெருக்கடி குறையும் என்றும் அவர் கூறினார்.  

ஆண்டின் முதல் சட்டப்பேரவை  கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உடையுடன் தொடங்கியது.  மூன்றாம் (ஜன. 11) நாளான இன்று  சட்டப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.  அந்தவகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியபோது, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கும், பெருநகரங்களில் உள்ளது போல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என்றார்.  

அமைச்சர் கே.என்.நேரு

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.  மக்கள் தொகையின் அடிப்படையில் இல்லாமல், எங்கு தேவை உள்ளதோ, அங்கு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும்,  இதன்மூலம் பெருநகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும் என்றும் தெரிவித்தார்.