அஜித் ரசிகர் உயிரிழந்த விவகாரம்: நடிகர்கள் அஜித், விஜய் மீது நடவடிக்கை கோரி புகார்..

 
அஜித் ரசிகர் உயிரிழந்த விவகாரம்: நடிகர்கள் அஜித், விஜய்  மீது நடவடிக்கை கோரி புகார்..

சென்னையில் துணிவு திரைப்படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில்,  நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு  திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 11ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. தயாரிப்பாளர் போனி கபூர் , எச்.வினோத் கூட்டணியில் 3வது படமாக உருவான இந்தப்படத்தில்,  மஞ்சு வாரியர், ஜான் கொகேன்,  நயனா சிங் ,  மகாநதி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.  துணிவு படத்திற்கு  ஜிப்ரான் இசையமைத்திருந்தார்; உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்தை வெளியிட்டது. துணிவு திரைப்படம் வெளியான அதே நாளில் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும் வெளியானது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.  

ajith

துணிவு படத்திற்கு நள்ளிரவு 1 மணியளவில் சிறப்புக் காட்சி வெளியானதால், முதல்நாள் இரவே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.  அப்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கம் முன்பு துணிவு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாரிசு பேனர்  மீது பட்டாசு , தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வீசி அஜித் ரசிகர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் , விஜய் கட் அவுட்களையும் அடித்து உடைத்தனர். அப்போது ரோகிணி திரையரங்கம் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று, சில இளைஞர்கள் நடனமாடினர். அதில், பரத் என்கிற 20 வயது மாணவர்  நடனமாடிய போது கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.   முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அஜித் ரசிகர் உயிரிழந்த விவகாரம்: நடிகர்கள் அஜித், விஜய்  மீது நடவடிக்கை கோரி புகார்..

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு,  கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.  அதேநேரம், நடிகர் அஜித் மற்றும்  திரைப்பட குழுவினருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், துணிவு படம் பார்க்கச் சென்று உயிரிழந்த பரத்  மரணத்திற்கு   நடிகர் அஜித் மற்றும் ரெட் ஜெயண்ட் குழுவினர் தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என்றும் , நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம்  புகார் அளித்துள்ளார். இரு குழுவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இணைய வழியாக புகார் அளித்திருக்கிறார்.