காவல் அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!!

 
tn

சென்னை மாவட்டம், எழும்பூரில் பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரகக் கட்டிடமானது, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல் துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளைக் கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை ஆகியவையும், முதல் தளத்தில், அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகள், வாள்கள், தோட்டாக்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. காவல் அருங்காட்சியகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகம் திறந்து ஓராண்டு நிறைவை அடுத்து வரும் 28ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை ஓராண்டில் 30 ஆயிரத்து 285 பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர். அத்துடன் கடந்த 14ஆம் தேதி முதல் வருகிற  26ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இங்கு ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, விவாதம் மேடை ,மாறுவேட போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.  

ttn

வருகிற 28ஆம் தேதி காலை 11 மணியளவில் காவல்  குழுவின் இசை நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணியளவில் மோப்பநாய் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பங்கு கொண்டு பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி உள்ளனர்.