தமிழக பாஜகவில் நடப்பதை மேலிடத்தில் தெரிவிப்பேன் - காயத்ரி ரகுராம் அதிரடி

 
Gayathri

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன் எனவும், மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன் எனவும் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும்,  கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். 

gayathri rahuram

இந்நிலையில் தன்னை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். தன்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 8 வருட உழைப்பை களங்கம் என்று கூறினால் எனக்கு கோபம் வரும். என் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது. மேலிடத்திற்கு என்னை பற்றி தவறான கருத்துக்கள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம். 

ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன். கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர்தான். என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை. பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார்.