குடும்பத்திற்கு முதல் முக்கியத்துவம்; அடுத்துதான் வேலை- நடிகர் விஜய்

 
vijay

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தமிழ் திரையுலகில் 65-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் பெரும்பாலானவை பிளாக் பாஸ்டர் ஹிட். தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய். இவர்  கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

 தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமென அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வமும் எதிர்நோக்கியுள்ளனர். 

இந்நிலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொள்ளும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இன்று நாமக்கல், புதுக்கேட்டை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் வருகைதந்தனர். 

5 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொளண்டார். இந்த நிகழ்வில் மக்கள் இயக்க அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

காலையிலிருந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், பிற்பகல் 2 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட விஜய், மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்தபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய்,  சந்தித்த அனைவரையும் நலம் விசாரித்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். 


2 மணி நேர சந்திப்பிற்கு பிறகு நடிகர் விஜய் புறப்பட்ட சென்றார். தொடர்ந்து பேட்டி அளித்த விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தளபதி விஜய் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். இனிவரும் காலங்களில் அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ மீண்டும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக கூறியிருக்கிறார். 

மாவட்ட தலைவர்கள் எல்லாம் தளபதி சந்திக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி இன்று மாவட்ட தலைவர்கள், அணி தலைவர், ஒன்றியம் நகர ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். சேலம், நாமக்கல், நாமக்கல் கிழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். மற்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவித்தார்.

வாரிசு படம் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு அதுகுறித்து தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். அரசியல் நுழைவு குறித்த கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் தளபதி உங்களிடம் சொல்லுவார் என ஆனந்த் பதிலளித்தார். 

மேலும், முதலில் குடும்பத்தை பாருங்கள் அதற்கு அடுத்தபடியாக தொழிலை பாருங்கள் தொழில் கிடைக்கக்கூடிய வருமானத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தில் ஏழை மக்களுக்கு செலவு செய்யுங்கள், தயவுசெய்து கடன் வாங்கி செலவு செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும், அடுத்த சந்திப்பு மிக விரைவில் இருக்குமென புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.