புதுச்சேரியில் 'பிரீபெய்டு' மின் மீட்டர் திட்டம் : மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை!

 
tn

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுவதோடு, பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் தொடர்ச்சியாக போராடியும், வலியுறுத்தியும் வருகின்றன.கடந்த இரண்டரை ஆண்டுகளாக மின்துறை தனியார்மயமாக்கம் கூடாது என்று வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.  இவ்விவகாரத்தில், புதுச்சேரி முதல்வர், அமைச்சர்களும், மின்துறை தனியார் மயமாகாது என்று கூறிக்கொண்டே,   தனியார்மயமாக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளனர்.

Puduchery

இதன் வாயிலாக, 100 விழுக்காடு பங்குகளையும் தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த மின்துறையும், அதில் பணி‌புரியும் ஊழியர்களும் தனியாரிடம் வேலை செய்யும் சூழல் ஏற்படும். மின்துறை ஊழியர்கள் அரசு‌ ஊழியர்களாக நீடிக்க மாட்டார்கள். மின்துறை ஊழியர்களின் சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்ற நிலைதான் ஊழியர்களுக்கு ஏற்படும்.இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், புதுச்சேரியில் பணம் செலுத்திய பிறகே மின் வினியோகம் பெறும் வகையில் பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாகும். இந்த மோசமான நடவடிக்கையால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நுகர்வோர்களின் பணம், அரசுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிக மதிப்பிலான மின் உபகரணங்கள், மின்துறைக்கு சொந்தமான 200க்கு ஏக்கருக்கு மேலான நிலம், மின் மாற்றிகள், உயர் மின்னழுத்த மின்புதைவடங்கள் உள்ளிட்டவைகள் தனியார் வசமாகும்.
மேலும், மின்துறை ஊழியர்களால் பெறப்படுகின்ற சம்பளம், ஓய்வூதியம், வருடாந்தர சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் இதர அனைத்தும் ஓய்வுக்கால பலன்கள் ஆகியவற்றுக்கு, பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

'velmurugan

எனவே, புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுவதோடு, பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இது மின்துறை ஊழியர்கள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும். இந்த அபாயங்களை பொருட்படுத்தாமல், மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் புதுச்சேரி அரசு  ஈடுபட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.