மக்களை துன்பப்படுத்துவது தான் திராவிட மாடலா ? - டிடிவி தினகரன் கேள்வி

 
ttv

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்களை துன்பப்படுத்துவது தான் திராவிட மாடலா என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும்,  மறைந்த முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் 114 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  அண்ணாதுரையின் பிறந்த நாளை ஒட்டி மதுரையில் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், கோவை அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

ttv dinakaran

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:  திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிச்சுமையை ஏற்றி துன்பப்படுத்துகின்றது. இப்படி மக்களை துன்பப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பதை தி.மு.க அரசு நிரூபித்து வருகின்றது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள். கடந்த தி.மு.க ஆட்சியில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த தி.மு.க ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.  மின்கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது. தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என மக்கள் உணர்ந்து விட்டனர். எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும். அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.