இடைத்தேர்தல் - அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நாளை சந்திப்பு

 
Annamalai

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  

Erode East

இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் இன்று அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இடைத்தேர்தல் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும்படி அண்ணாமலையிடம் கேட்டுக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.