சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுகவினர் - ஈபிஎஸ் இரங்கல்!!

 
ep

அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த அதிமுகவினர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திருவள்ளூர் மாவட்டம், வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் 11.07.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, வேன் மூலம் வருகைதந்தபோது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஒன்றியம், கீழ்கொடுங்காலூர் ஊராட்சியைச் சேர்ந்த, அண்ணாநகர் கிளைக் கழகச் செயலாளர் திரு. B. அண்ணாமலை, பாரதி நகர் கிளைக் கழக மேலமைப்புப் பிரதிநிதி திரு. S. பரசுராமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும்; மேலும் இந்த விபத்தில், பாரதி நகர் கிளைக் கழகச் செயலாளர் திரு. K. துரை, வினோபா நகர் கிளைக் கழக மேலமைப்புப் பிரதிநிதி திரு. S. சரவணன், கன்னிகாபுரம் கிளைக் கழகத்தைச் சேர்ந்த திரு. N. பெருமாள், பாவேந்தர் நகர் கிளைக் கழகச் செயலாளர் திரு. P. ரவி மற்றும் அம்பேத்கர் நகர் கிளைக் கழக மேலமைப்புப் பிரதிதிநிதி திரு. S. தங்கராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தும்; ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி திரு. M. ராமச்சந்திரன், கன்னிகாபுரம் கிளை பாசறை உறுப்பினர் திரு. S. மோகன், ஓட்டுநர் திரு. G. வேதபுரி ஆகியோர் லேசான காயமடைந்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைகிறேன்.

ttn

கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுபோன்ற வேதனை தரக்கூடிய விபத்துகள் நடைபெற்று, கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை இழக்கும் துயரச் சம்பவங்கள் என்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது. இந்த விபத்தில் அகால மரணமடைந்த திரு. அண்ணாமலை, திரு. பரசுராமன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 7,00,000/ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

eps

இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் திரு. துரை, திரு. சரவணன், திரு. பெருமாள், திரு. ரவி, திரு. தங்கராஜ் ஆகிய 5 பேரின் மருத்துவ சிகிச்சைக்காக தலா 1 லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் திரு. ராமச்சந்திரன், திரு. மோகன், திரு. வேதபுரி ஆகிய 3 பேரின் மருத்துவ சிகிச்சைக்காக தலா 25,000/- ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வேதாடு, சிகிச்சை பெற்று வரும் கழக உடன்பிறப்புகள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.