அதிமுக தலைமை அலுவலக சாவி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

 
admk office

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை மீண்டும் நடைபெறவுள்ளது.  
 
கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார்.  இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே அசம்பாவிகளை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.  சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது.

ops eps

  

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி கேவியட்  மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் 3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமறத்தில் மீண்டும் நாளை நடைபெறுகிறது.  இதனால் அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்ப்பு எழுந்துள்ளது