ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி - ஜி.கே.வாசன் அறிவிப்பு!

 
tn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

 கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்.  சமீபத்தில் திருமகன் ஈவேரா எம்எல்ஏ உயிரிழந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

election

இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.  ஜெயக்குமார் ,வளர்மதி ,கோகுல இந்திரா, பெஞ்சமின் ஜெய் ஆகியோர் வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே. வாசன் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், வெற்றி வியூகத்தை வகுக்கவே அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எங்கள் இலக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதிமுகவுடன் ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருகிறோம்.  வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமையை நாங்கள் நன்கு உணர்கிறோம் .  இடைத்தேர்தல் வேட்பாளரை ஓரிருநாளில் அறிவிப்போம் என்றார்.

tn

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கிறது  என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.