எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவின் அழிவு நிச்சயம் - பண்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி

 
Panruti Ramachandran

எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை காப்பாற்ற முடியாது எனவும், எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது எனவும் அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பெரும் பேச்சு பொருளாக உருவாகியுள்ளது. இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 3 தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தை சீரழிக்கக் கூடாது. முதலில் கட்சியை சரி செய்துவிட்டு, பிறகு மக்கள் ஆதரவை பெற வேண்டும். அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது. அதிமுகவை மீட்க யார் முன் வந்தாலும் என் முழு ஆதரவை தருவேன். டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார். சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்க போராடுகிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது. அதிமுகவை மீட்க போராடுகின்றனர். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.