சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக அலுவலக மேலாளர் ஆஜர்!

 
tn


கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  அப்போது, அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.  இதில் காவல்துறையினர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின்  அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் ,மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அதேபோல உதவி ஆய்வாளர் காசு பாண்டி கொடுத்த புகாரில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் ,ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

admk office

எஞ்சிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யும் பணியை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் சென்னை காவல்துறை  சிபிசிஐடி போலீசாரிடம் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை ஒப்படைத்த நிலையில் அதிமுக கலவரம் தொடர்பான 4 வழக்குகளில் இரண்டு வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முதற்கட்டமாக அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சென்னை ராயப்பேட்டையில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணையை தொடங்கினர்.சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் விசாரணையை தொடங்கி,  தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

tn

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம்,  சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசன் முன்னிலையில் ஆஜாராகியுள்ளார்.மேலாளர் மகாலிங்கம் மட்டுமின்றி  பாபு முருகவேள் உள்ளிட்ட அதிமுக வழக்கறிஞர்களும் ஆஜராகி விளக்கம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது