ஜெயலலிதா அறையில் கொள்ளையடிக்க ஓபிஎஸ்-க்கு எப்படி மனம் வந்தது? - சிவி சண்முகம் கேள்வி

 
cv

அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா அறைக்குள் புகுந்து கொள்ளையடிக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு எப்படி மனம் வந்தது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.


அதிமுக அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற மோதலின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், அங்கு பல்வேறு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் அசல் பத்திரத்தை காணவில்லை என ராயப்பேட்டை காவல்நிலையத்தில்  சண்முகம் புகார் அளித்துள்ளார். அதிமுக அசல் பத்திரம் காணாமல் போனது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.

CV Shanmugam

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் கூறியதாவது: கடந்த மாதம் 21ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் மனுதாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் பொதுக் குழுவை நடத்த அனுமதி அளித்ததால் ஆவேசம் அடைந்த ஓபிஎஸ், சென்னை ராயப்பேட்டையில் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தை தனது ஆதரவாளர்களுடன் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும், அங்கு இருந்த பொருட்கள், பத்திரங்கள், பரிசு பொருட்கள், கட்சியின் பல்வேறு வகையான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்து கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து விட்டு சென்றார். 

முதலமைச்சராகிய மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறையை உடைத்து, அங்கு இருந்து ஆவணங்கள் மற்றும் பரிசு பொருட்களை எடுத்துச் செல்ல ஓபிஎஸ்-க்கு எப்படி மனம் வந்தது?  அவர் மீதும் சம்பவத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.