திடீரென மாறிய அதிமுக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தின் புகைப்படம்

 
eps

அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். அதிகாலை முதலே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொதுக்குழு நடக்கவிருக்கும் தனியார் மண்டபத்திற்கு சென்ற வண்ணம் இருந்தனர். ஆனால் பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எந்த நகர்வும் இல்லாமல் இருந்தது. காலை 7 மணிக்கு நிர்வாகிகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் தனது வீட்டிலிருந்து கீழே இறங்கி தொண்டர்களை பார்த்து கையசைத்து வாழ்த்து கூறி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். 

தீர்ப்பு வந்த பிறகு தனது வீட்டிலிருந்து ஓபிஎஸ் கிளம்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவர் அதற்கு முன்னதாகவே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு கிளம்பினார். பசுமைவழிச் சாலையில் இருந்து அதிமுக அலுவலகம் வரை அவரின் ஆதரவாளர்கள் வாகனத்திலும் நடந்தும் பன்னீர்செல்வத்தை பின்தொடர்ந்தனர். 

அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அருகில் பன்னீர்செல்வத்தின் வாகனம் வந்தபோது ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தான் முதலில் தாக்க தொடங்கினார்கள் என ஓபிஎஸ் தரப்பில் இருந்து குற்றம் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த களவரம் மதியம் வரை தொடர்ந்தது. பொதுக்குழு நடத்திக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதிமுக கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதால் ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நீக்குவற்கான தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்துள்ளார். மேலும் அதிமுக பொதுச் செயலாளராகவும் எடப்பாடி கே பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரவூர்வ டிவிட்டர் பக்கத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய புதிய புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.