மோடியின் 8 ஆண்டுகால ஊழலற்ற ஆட்சியால் இந்தியா உலகளவில் உயர்ந்துள்ளது- செல்லூர் ராஜூ

ஒரே நாடு, ஒரே தேர்தல் மோடி ஜியின் கனவு திட்டமாகும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் முழு உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு நிச்சயம் ஆதரவு தெரிவிக்கிறோம். ஏனெனில் இரண்டு தேர்தல் வைப்பதால் மக்கள் வரிப்பணம் விரயமாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயம் வேண்டும். இது பிரதமர் மோடியின் கனவுத்திட்டம். அவரது 8 ஆண்டுகால ஊழலற்ற ஆட்சியால் உலகளவில் இந்தியா உயர்ந்துள்ளது. இந்திய நாட்டை வல்லரசாக மாற்றுவதில் பிரதமர் மோடி முனைப்பு காட்டுகிறார். அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி இருக்கிறார். ஒரே நாடு-ஒரே தேர்தல் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற நினைக்கிறார் மோடி ஜி” எனக் கூறினார்.