ரத்னவேலை மீண்டும் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்

 
ops

மருத்துவர் ரத்னவேலை மீண்டும் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துளதாவது: 30-04-2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த 'மகரிஷி சரக் சபத்' என்ற சமஸ்கிருத வாக்கியத்தைக் கூறி மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், தவறேதும் இழைக்காத மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஏ. ரத்னவேல் காத்திருப்புப் பட்டியலில் தமிழ்நாடு அரசு வைத்திருப்பதாக செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.பாரம்பரிய உறுதிமொழியான ஹிப்போகிராடிக் உறுதி மொழிக்குப் பதிலாக 'மகரிஷி சரக் சபத்' என்ற பெயரில் மருத்துவ மாணவர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட உறுதிமொழியை புதிதாக மருத்துவம் பயில வரும் மாணவ, மாணவியர்கள் ஏற்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தது. 

Madurai Medical collage

'மகரிஷி சரக் சபத்' உறுதிமொழி குறித்து வருகின்ற செய்திகளைப் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்பதும், இந்த உறுதிமொழி படிக்கப்படுவது குறித்து யாரிடமும் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பதும், பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற உறுதிமொழி ஏற்கெனவே எடுக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதன்மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது. மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காதது இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.


எனவே, முதலமைச்சர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற * செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, மருத்துவர் ஏ. ரத்தினவேல் அவர்களை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும், இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.