ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக போட்டியா?? - நாளை டிடிவி தினகரன் ஆலோசனை..

 
TTV

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நேற்று 3 மாநில சட்டப்பேரவை  தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்,  காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது.  இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.  இந்த இடைத்தேர்தலில்  போட்டியிட ஒவ்வொரு கட்சியும் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டி வருகின்றன.  கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியதை அடுத்து தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

election

 கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட  டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கு 1,204 வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி செந்தமிழனிடம் கேட்டபோது ,  ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.  அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது என்றும்,  இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது என்றும்,  இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.