கோவை ஈஷாவுக்கு யோகா பயிற்சிக்கு வந்த இளைஞர் தற்கொலை

 
தற்கொலை

கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்கு வந்த ஆந்திராவை சேர்ந்த  இளைஞர் மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து புகார்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா. 32 வயதான இவர் கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக தங்கி யோகா பயிற்சி பெற்று வருகிறார். மன அழுத்தம் காரணமாக கோவை வெள்ளியங்கிரி  யோகா மையத்தில் தங்கி அவர் யோகா பயிற்சி பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் தூக்கு போட்டு கொள்ளு ரமணா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் ஈஷா யோகா மையத்திற்குள் சென்று ரமணாவின் உடலை கைப்பற்றினர். 

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது. ரமணா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய ஆலாந்துறை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.