ரவுடியுடன் தன்னை இணைத்து பேசியதால் இளம்பெண் தீக்குளிப்பு

 
f

பிரபல ரவுடி உடன் தன்னை இணைத்து வைத்து பேசியதால் மன உளைச்சல் அடைந்த இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  சென்னை அண்ணா நகரில் நடந்திருக்கிறது இந்த சம்பவம். 

 அண்ணா நகரில் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மகாலட்சுமி.  இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமி வீட்டில் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்திருக்கிறார்.  தீ  உடல் முழுவதும் பரவியதில் வலி தாங்க முடியாமல் கதறி துடித்து இருக்கிறார் மகாலட்சுமி.

பெ

 சத்தத்தை கேட்டு ஓடி வந்த கணவர் மனைவியின் நிலையை பார்த்துவிட்டு போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.  எல்லோரும் சேர்ந்து போர்வையை போர்த்தி தீயை அணைத்துள்ளனர்.  அதன் பின்னர் மகாலட்சுமி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.   அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாலட்சுமி சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்து உள்ளார்.

 தகவல் அறிந்ததும் அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மகாலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அம்முவுக்கும் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.   அப்போது மகாலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கும் தகாத உறவு இருப்பதாக சொல்லி அம்மு ஆபாசமாக பேசி இருக்கிறார்.  இதை கேட்டு மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து போலீசார் அம்முவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.