வேறொரு நபருடன் தொடர்புபடுத்தி அவதூறாக பேசியதால் மன உளைச்சலில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

 
fire accident

வேறொரு நபருடன் தொடர்புபடுத்தி உறவினர் அவதூறாக பேசியதால் மன உளைச்சலில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Old woman sets herself on fire in Gobi | கோபியில் மூதாட்டி தீக்குளித்து  தற்கொலை

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகர் 10வது தெருவில் வசித்து வந்தவர் மகாலட்சுமி (26). இவரது கணவர் விஜயகுமார் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வரும் நிலையில், இவர்களுக்கு 2 ஆம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி படிக்கும் இரு குழந்தைகள் உள்ளனர். எனவே குடும்பத்தைக் காப்பாற்ற மகாலட்சுமி அண்ணா நகரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள 8வது தெருவில் வசித்து வந்த அண்ணா நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ராபர்ட் மகாலட்சுமியிடம் தரக்குறைவாகப் பேசி தனது பாலியல் இச்சையை வெளிப்படுத்தியுள்ளான். மேலும், தனது ஆசைக்கு இணங்க மறுத்தால் கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிடுவேன் எனக்கூறி மிரட்டி பாலியலுக்கு வற்புறுத்தியுள்ளான். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று மகாலட்சுமியின் கணவர் விஜயகுமார் தனது உறவினருடன் சகோதரர் மகன் பிறந்தநாள் விழாவிற்காக பத்திரிக்கை வைக்கச் சென்றுவிட்ட நிலையில், மகாலட்சுமிக்கும், அதே தெருவில் வசித்து வரும் அவரது உறவினரான அமுலு என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின்போது அமுலு மகாலட்சுமியை ராபர்டுடன் இணைத்து தவறாக சித்தரித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட மகாலட்சுமி தனது வீட்டிற்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு வீட்டில் இருந்த தின்னரை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஒன்றுசேர்ந்து மகாலட்சுமி உடலில் பற்றிய தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.