திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை சூழ்ந்த வெண்ணிற நுரை - பொதுமக்கள் அவதி!!

 
tn

சாயக்கழிவுகளால் சேலம் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை  வெண்ணிற நுரை சூழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஜவுளி ஆலை கழிவுகள்,  நகராட்சி கழிவுகளால் திருமணிமுத்தாறு மாசடைந்து வருகிறது. இது தொடர்பாக 2015ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில்,  திருமணிமுத்தாறு நதிநீரின் தரம் திருப்திகரமாக இல்லை என்றும் திருமணிமுத்தாறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆற்று நீரின் தரத்தை மீட்டெடுக்கவும், பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும், தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன் திருமணிமுத்தாறு நீர் பிடிப்பு பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் கழிவு நீரை ஆற்றில் வெளியேற்றுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்றும் , இதை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறியிருந்தது.

tn

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ரசாயன கழிவு தொழிற்சாலைகள் நேரடியாக ஆத்துக்காடு பகுதியில் திருமணிமுத்தாற்றில் கழிவுகளை திறந்து விட்டுள்ளன. இதன் காரணமாக ஆற்றில் வெண்ணிற நுரை பொங்கி எழுந்துள்ளது.  இதனால் தரைப்பாலம் நுரைகளால் மூழ்கியதில் கிராம மக்கள் அதை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தரைப்பாலம் முழுவதும்  மூழ்கி இருக்கும் நிலையில் அதிலிருந்து நுரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் பொதுமக்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.