ஆணாக மாறி பேஸ்புக் தோழியை திருமணம் செய்த இளம்பெண்

 
marriage

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பேஸ்புக் மூலம் தோழிகளாக பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்ட இரு இளம்பெண்களின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர், எலக்ட்ரிஷனாக உள்ளார். இவரது மனைவி பாண்டீஸ்வரி, இவர்களுக்கு சௌமியா (21) என்ற மகள் உள்ளார். இவர், கொடைக்கானல் மதர் தெரசா கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். 

இந்நிலையில், இவருக்கு பேஸ்புக் மூலம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ராஜா -  பொன்னுத்தாய் தம்பதிகளின் மகள் நந்தினிதேவி (24) பழக்கமானார்.  முதலில் இருவரும் பேஸ்புக் மூலம்  தோழிகளாக பழகி வந்தனர். பின்னர், இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினார். இதனையடுத்து இருவரும் காதல் ஜோடியாக கொடைக்கானல், மதுரை, சென்னை, திருச்சி என, பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி வந்தனர். 

இந்நிலையில் தன் தோழி சௌமியாவை திருமணம் செய்து கொள்வதற்காக  நந்தினிதேவி ஆணாக மாற முடிவு செய்தார். இதற்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில், ரூபாய் ஒரு லட்சம் வரை செலவு செய்து,  ஆணாக மாற சில ஆபரேஷன் செய்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் முழுமையாக ஆணாக  மாறுவதற்கு மேலும் ஆறு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை மருத்துவமனையில் பெற்றுள்ளார். அறுவை சிகிச்சை செய்த பிறகு, தன்னுடைய பெயரை நந்தினிதேவியை - யஸ்வந்த் என மாற்றிக் கொண்டார். பின்னர், யஷ்வந்த் சௌமியா இருவரும் கடந்த 07.07.22 அன்று மதுரையில் உள்ள ஒரு முருகன் கோயிலில் இருவரும் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். 

திருமணம் செய்த பின்னர் சாத்தூரில் தனியாக வீடு எடுத்து  கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த தகவல், பழைய வத்தலகுண்டில் உள்ள சௌமியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாத்தூருக்கு சென்ற சௌமியாவில் பெற்றோர் தனது மகள் சௌமியாவை வத்தலகுண்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், தன் மனைவியை கட்டாயப்படுத்தி அவரது பெற்றோர் அழைத்துச் சென்று விட்டதாக கூறி, யஸ்வந்த் கடந்த 17.07.22 அன்று வத்தலகுண்டு போலீஸில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காததால், கடந்த 20.07.2022 அன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இன்று 23.07.22 நிலக்கோட்டை டிஎஸ்பி அலுகத்தில் DSP முருகன்  விசாரணை நடத்தினார். அப்பொழுது தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். விசாரணை நடத்திய டிஎஸ்பி முருகன் சௌமியா மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர் ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை இதனை எடுத்து தனது  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி யஸ்வந்த் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த், “தன் காதலிக்காக, பெண்ணாக இருந்த நான், வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்து,  ஆணாக மாறி அவளைத் திருமணம் செய்து கொண்டேன். ஆணாக  மாறுவதற்கு எடுத்துக் கொண்ட சிகிச்சை என்னோட ஆயுள்காலம் 40 ஆண்டுகள் மட்டும் நான் உயிர் வாழ முடியும். அதற்கு மேல் என்னால், உயிர் வாழ முடியாது. என் உயிரை பணையம் வைத்து, என் காதல் மனைவிக்காக, நான் சிகிச்சை பெற்று வருகிறேன். மேலும், 6 மாதங்களுக்கு பிறகு நான் முழு ஆணாக மாறி விடுவேன். என் மனைவியுடன் சேர்த்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.